எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கையின் மூலம் திருப்பூரில் உள்ள சிறு, குறு பின்னலாடை தொழில் நிறுவனங்கள் முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
அமெரிக்க அதிபராக 2வது முறை பொறுப்பேற்ற டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை அறிவித்தார்.
குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக 25 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏற்கனவே 25 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி கூடுதல் வரி 25 சதவீதத்துடன் சேர்ந்து 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறை, புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
இந்த வரிவிதிப்பின் காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடை தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. அதிலும் பெரும்பகுதி தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால், திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி அமலுக்கு வந்த போதே, திருப்பூருக்கு வர வேண்டிய குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர்கள், வங்கதேசம், வியட்நாம், கம்போடியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றதாக திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்து இருப்பதாக கவலையுடன் கூறுகின்றனர்.
தற்போது, இந்திய பொருட்களுக்கான 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், திருப்பூரில் நடைபெற்று வரும் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் முழுவதுமாக முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையின் மூலம், 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறும் ஏற்றுமதியாளர்கள், இதனை தவிர்க்க மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு 10 சதவீதம் மானியம், வட்டிச்சலுகையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
புதிய வடிவமைப்பு ஆடைகளை கொண்டு வருவதன் மூலமும், மற்ற சந்தைகளை விரிவுபடுத்துவதன் மூலமும் வரி விதிப்பினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என வெளிநாட்டு வர்த்தக ஆலோசகரான லோகநாதன் தெரிவித்துள்ளார். வரி விதிப்பின் தாக்கம் உடனடியாக தெரியாவிட்டாலும் அடுத்த 15 நாட்களில் தெரியவரும் என்றும், அப்போது தான் எந்தெந்த நிறுவனங்கள் மூடப்படுகிறது என்பதும், எவ்வளவு நிறுவனங்கள் தாக்குப்பிடித்து செயல்படுகிறது என்பதும் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு மாற்றாக ஏற்றுமதி செய்ய 40க்கும் மேற்பட்ட நாடுகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளநிலையில், அந்த நாடுகளில் உடனடியாக வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் பல நிறுவனங்கள் மூடப்படுவதை தடுக்க முடியாது என தெரிவிக்கும் ஏற்றுமதியாளர்கள், மத்திய அரசின் உடனடி நடவடிக்கையையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.